பல்லுப் போனால் சொல்லுப் போச்சு” என்கிற
பழமொழி உணர்த்தும் சொல் என்பது உடல் ஆரோக்கியத்தை என்றே கருத வேண்டும்.
ஏனெனில் பற்களின் ஆரோக்கியமே உடலின் ஆரோக்கியத்தின் அடையாளம். சமீப
காலத்தில் பல் மருத்துவம் மிக பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கும்
வைத்திய துறை என்றால் மிகையில்லை.
இன்றைக்கு
நவீன அறிவியல் பற்களை பராமரிக்கவும், பளிச்சென வைக்கவும் பல்வேறு மருந்து
பொருள்களை சந்தைப் படுத்தினாலும் கூட, நமது முன்னோர்கள் நமக்களித்த ஆலும்,
வேலும் இன்றும் சிறப்பான பல் பராமரிப்பு உத்தியாக இருக்கிறது என்றால்
மிகையில்லை. பற்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பழுது உண்டாகி விடுவதை
தடுப்பது போன்ற விழிப்புணர்வு நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது.
அந்த
வகையில் செயற்கை பொருட்களைத் தவிர்த்து இயற்கை பொருட்களைக் கொண்டு பற்களை
உறுதியாகவும் குறை இன்றியும் பேண ஒருவகையான பற்பொடி ஒன்றை தயாரிக்கும்
முறையைதன்வந்திரி தனது “தன்வந்திரி வைத்திய காவியம்” என்னும் நூலில்
அருளியிருக்கிறார்.
போச்சப்பா தந்தமென்ற வியாதிக்கப்பா
பொல்லாத அரப்பொடியு மக்கிராகாரம்
நீச்சென்ற படிகாரம் மிருதார் சிங்கு
நோரான லவங்கையிடப் பட்டையப்பா
ஆச்சென்ற காசுக்கட்டி துருசுங்கூட்டி
அப்பனே கணக்காகக் கல்வம் போடு
பாச்சென்ற எலுமிச்சம் பழச்சாற்றாலே
பாங்குபெற நாற்சாம மாட்டு ஆட்டே.
ஆட்டியே நெருங்கவே மடிந்தபின்பு
அப்பனே சீசாவிற் பதனம் பண்ணு
கூட்டியே நான்குநாள் தேய்த்து வந்தால்
குடிலமாம் தந்தஅசைவு தந்தசன்னி்
நீட்டியே சீழ்விழல் ரத்தங்காணல்
நிலையாது வுடலை விட்டு நீங்கும்பாரு
தாட்டிகமா யிந்தநூல் முறைபொய்யாது
தப்பாது தப்பாது திண்ணந்தானே.
அரப்பொடி,
அக்ராகாரம், படிகாரம், மிருதார் சிங்கி, லவங்கப்பட்டை, காசுக்கட்டி,
துருசு இவைகளை சம எடையில் எடுத்து கல்வத்தில் போட்டு எலுமிச்சம் பழச்சாறு
விட்டு நான்கு சாமம் அரைக்க வேண்டுமாம். ஒரு சாமம் என்பது மூன்று மணி
நேரம்.
இவ்வாறு
நான்கு சாமமாக நன்கு அரைத்து பின்னர் அதை சேகரித்து பத்திரப் படுத்திக்
கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையை கொண்டு நான்கு நாட்கள் பல்
துலக்கிவர தந்தவாய்வு, தந்தசன்னி, தந்தத்தில் சீழ்வடிதல், ரத்தம் வடிதல்,
முரசு சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார். இப்படிச் செய்தால்
இந்த நோய்கள் நிச்சயம் குணாமாகும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
இந்த
சரக்குகள் எல்லாமே தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே
தயாரித்து பலன் பெற்றிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக