வலைப்பதிவு காப்பகம்

வியாழன், 24 நவம்பர், 2016

ராகு கால துர்கை அம்மன் வழிபாட்டு முறை!!
நாம் இந்து மத இறைவழிபாட்டில், 100க்கு 90 சதவீத பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபடவேண்டும்.
* நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.
* நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தத்தல் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய் கிழமை ராகு காலத்தில் மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும்.
* நமக்கான, நமது குடும்பத்திர்க்காண, வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும்.
இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.
வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.
துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்?
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.
ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
எலுமிச்சையின் மகிமை
ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக