வலைப்பதிவு காப்பகம்

சனி, 11 பிப்ரவரி, 2017

பலாக் கொட்டை தைல கற்பம்
மா, பலா, வாழை எனும் முக்கனிகளில், இரண்டாவதாய் இருந்தாலும் பழங்களின் அரசன் என்கிற பெருமை பலாபழத்திற்கு மட்டுமே உண்டு. பலா இலங்கை மக்களின் அன்றாட உணவு பழக்கத்தில் இரண்டறக் கலந்த ஒன்று. பலாப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ரிபோப்ளவின், தயமின் போன்ற தாது சத்துக்கள் பொதிந்திருப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.
பலாப் பழத்தை தனியே சாப்பிடாமல் அதனோடு நாட்டுச் சர்க்கரை, பால் அல்லது நெய்யோடு சேர்த்து சாப்பிடுவது சிறப்பு. உடல் நலனுக்கும் நல்லது. பலாப் பழத்தின் மருத்துவப் பண்புகள் மகத்தானவை. எனினும் இன்றைய பதிவில் பலாப் பழத்தின் கொட்டையில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு கற்ப வகை பற்றி பார்ப்போம்.
இந்த தகவல் கருவூரார் அருளிய "கருவூரார் வாதகாவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
உசிதப் பிலாவின் கொட்டை
உசிதமாய்க் குழித்தயிலம் வாங்கி
வச்சிடாய் பாழமை கொண்ட
கலசத்தில் வைத்து நன்றாய்
நிச்சயத் தயிலம் மூன்று
களஞ்சிதான் நெய்யில் கொள்ள
பச்சையாய் மூர்ச்சை போகும்
பசுவின்பால் குடிக்க நிற்கும்
அய்ய மென் கருங்குருவை
அரிசி வெந்திட்ட சோறு
நெய்யொசு பாலும் ஆகும்
நள்ளவே மற்றொன்றும் மாகாதப்பா
ஏதப்பா வென்றால் மாதம்
இப்படிக் கொண்டா யானால்
நாதன்நீ பகலிலேதான் நட்சத்திரம்
நலமாய்தான் தெரியு மப்பா
தப்பாமல் தெரியும் நட்சத்திரம்
தேக சித்தியும் ஆகுமீதே
பலாக் கொட்டைகளை சேகரித்து, அதில் இருந்து குழித் தைலம்(குழித் தைலம் செய்யும் முறையினை இங்கே காணலாம்.) எடுத்து பழைய மண்பானை ஒன்றில் சேமித்து வைக்க வேண்டும் என்கிறார். பின்னர் இந்தத் தைலத்தில் இருந்து மூன்று கழஞ்சு அளவு எடுத்து, அதனை நெய்யில் குழைத்து உண்ண வேண்டுமாம். அப்படி உண்ணும் போது மயக்க நிலை போல் ஏற்படுமாம் அப்போது பசுப்பால் குடித்தால் அந்த நிலை நீங்குமாம்.
இப்படி தொடர்ந்து ஒரு மாதம் வரை உண்டு வந்தால் பகலில் நட்சத்திரங்கள் தென்படும், அத்துடன் காயசித்தியும் உண்டாகும் என்கிறார்.
இந்த கற்ப முறைக்கு பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் கருங்குருவை அரிசிச் சாதமும், நெய்யும், பாலும் மட்டுமே உணவாக கொள்ள வேண்டுமாம். மற்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக